• பிங்க் நிற திரைச்சிலையை விளக்கியபடி எட்டிப் பார்க்கும் ஒரு நிர்வாண பாலகனின் முழு நீள கண்ணாடி ஓவியத்தை பார்ப்பதற்காகவே அப்பாவுடன் சலூன் கடைக்கு சிறு வயதில் சென்று இருக்கிறேன். ஓவியங்கள் மீதான பிரேமை அப்போதிலிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். இன்று வரை கவிதைக்கு இணையாகவே ஓவியங்களை இன்னும் எத்தனை விதமாக இதை விரித்துப் பார்க்க வேண்டும் என மனம் ஏங்கும்.


    நேற்று உக்கிரமான மத்திய பொழுதில் ஐவர் படையென சிவராஜ் அண்ணா உடன் கிளம்பி சித்தன்னவாசல் குகை ஓவியத்தை காண மலையேறினோம். ஒற்றை கழுகு விண்ணில் வட்டமடித்துக் கொண்டே குகை ஓவிய சிகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தது. குகையில் உள் நுழைந்ததும் இரு தூண்களிலும் சுண்ணாம்பு பூச்சில் சிதிலமடைந்த ஓவியமும், மேல்சுவரில் உதிர்ந்தது போக எஞ்சிய ஓவியங்களில் அன்னப்பறவைகள், பசு, யானை, தாமரை மலர்கள், மகர மீன்கள், அன்றில் பறவைகள் என பனிரெண்டாம் நூற்றாண்டின் ஒரு பசுமையான காட்சி சித்திரத்தை சுண்ணாம்பில் ஈரம் காய்வதற்கு முன் இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டியுள்ளனர். ஏறத்தாழ நாலு லட்சம் இரவு பகல்களை கடந்து இன்றும் தன்னை காணவரும் மானுடர்களுக்கு காட்சியளிக்கிறது. ஓவியநெலிவுகளை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு சற்று நேரம் கண் மூடி அமர்ந்து கொண்டேன். தன்னுணர்வை இழக்கும் இது போன்ற தருணங்கள் எப்போதேனும் ஏற்படுவது உண்டு.


    பின்னர் குகையில் இருந்து வெளியே வந்து சமகாலத்தில் கால் வைத்து அண்ணன்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மலை இறங்கியதும் மனம் லேசானது. மண்ணைப் பிளந்து சமதளத்தில் இருந்து மெல்ல மெல்ல மேலெழுந்த பூமியின் பிள்ளைகள் மலைகள். மலை உச்சி என நாம் அண்ணாந்து பார்க்கும் உயரங்கள் யாவும் லட்சம் ஆண்டுகளுக்கு முன் சிறு தளிரென மண்ணில் முளைத்தவையே. இந்த உண்மையை ஒவ்வொரு மலையை காண்கையிலும் காலத்தின் முன் நாம் ஒரு துகள் என எண்ணி கைகூப்பி அழுதிருக்கிறேன். அதற்கு இணையான மன எழுச்சியையே இந்த சித்தன்னவாசல் ஓவியங்கள் அருளியது.